அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை வெள்ளத்தால் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் தென் மத்திய பகுதியில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக இந்த மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 4 ஆம் திகதி சில மணி நேரத்தில் 280 மில்லி மீற்றர் மழை பெய்தது.
இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 29 அடி வரை உயர்ந்தது.
இதன் காரணமாக கடந்த 5 ஆம் திகதி டெக்சாஸ் மாகாணம், ஹில் கன்ட்ரி பகுதியில் குவாடலூப் நதிக் கரைகளில் இருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 37 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு கெர் பகுதியில் மாணவிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 750 மாணவிகள் தங்கியிருந்தனர். குவாடலூப் நதி வெள்ளத்தில் சிறப்பு முகாமின் கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
பெரும்பாலான மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 15 மாணவிகள் சடலங்களாக மீட்கப்பட்டனர். 27 மாணவிகளை காணவில்லை.
சுமார் 1,000 இற்கும் மேற்பட்ட மீட்புப் படை வீரர்கள் இரவு, பகலாக வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். ஹெலிக்கொப்டர்கள், ரோந்து படகுகள் மூலம் காணாமல் போன மாணவிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.