வதைமுகாம் நடாத்தியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்கள் என்னவெனில்,
தலதா மாளிகை மீது கடந்த 1989 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நடத்திய தாக்குதல் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்
ரோகிணி கவிரத்ன கேள்வி எழுப்பியபோது, பாராமன்றத்தில் சூடான வாதங்கள் எழுந்தன.
இதன்போது, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினரை ஒரு கொலைகாரனின் மகள் என்று அழைத்தார்.
இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கவிரத்னவுக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து ஆளுங்கட்சியின் சபை முதல்வர் எழுந்து நின்றபோது சபை பதற்றமடைந்தது.
“மாத்தளையில் உள்ள மனித புதைகுழியில் இருந்து பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்போது ஒரு கொலைகாரனின் மகள் எங்கள் முன் நிற்கிறாள்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த கட்டத்தில் கோபமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நோக்கி, அவர் நிலையியல் கட்டளைகளை மீறியதாகக் குற்றம் சாட்டி கூச்சலிடத் தொடங்கினர்.
1989 ஆம் ஆண்டு ஐ.தே.க அரசாங்கத்தின் அமைச்சர்களும் எம்.பி.க்களும் சித்திரவதை கூடங்களை நடத்தினர் என்பது அனைவரும் அறிந்ததே என்று ஆளுங்கட்சியின் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க கூறினார்.
“சித்திரவதை கூடங்களை(வதை முகாம்களை) நடத்திய அனைவருக்கும் எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்வோம்” என்று பிமல் ரத்நாயக்க கூறினார்.