நான்கு அம்ச கோரிக்கையோடு ஈழ தமிழன் உண்ணாவிரதம்

நான்கு அம்ச கோரிக்கையோடு ஈழ தமிழன் உண்ணாவிரதம்

இந்தியா இலங்கை

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி சிறப்பு முகாமில் நீராகாரம் அருந்தாமல் உண்ணா நோன்பில் ஈழ தமிழர் ஒருவர் உண்ணாவிரதம் இருக்கின்றார்.

இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபடும் யோகராசா நவநாதனின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் தமிழக அரசும் இந்திய ஒன்றிய அரசும் மதிக்க வேண்டும் என

பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யோகராசா நவநாதன் முன்வைத்துள்ள கோரிக்கைகளானது நிறைவேற்ற முடியாதவை அல்ல. அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகள் என்பதுடன் நியாயமான கோரிக்கைகளும்கூட.

  • தமிழ் நாட்டில் இருந்து ஈழ அகதிகளை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்ப கூடாது.
  • தமிழ் நாட்டில் இருந்து ஈழத்தமிழர்களை அரசியல் வேலைகளை செய்வதற்கு சட்டத்திற்கு உட்பட்டு அனுமதிக்க வேண்டும்.
  • தமிழ் நாட்டில் உள்ள முகாம்களில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களுக்கு இங்கு குடியுரிமையை வழங்க அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும்.
  • முன்னாள் விடுதலை புலிகள் என்னும் சந்தேகத்தின் பெயரில் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பவர்களுக்கு, இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருக்கும் ஈழத்தமிழர்களை சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டில் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும். அல்லது அவர்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பனவே அந்த நான்கு அம்சக் கோரிக்கைகள்.

ஈழத்தில் இருந்து அடைக்கலம் கோரி தமிழ்நாட்டுக்கு வந்துள்ள எமது தொப்புள்கொடி உறவுகளின் குறைந்தபட்ச கோரிக்தைகளை கூட நிறைவேற்றுவதற்கு இதற்கு முன்னர் இருந்த இந்திய ஒன்றிய,

மாநில அரசாங்கங்களும், தற்போது ஆட்சியில் இருக்கின்ற ஒன்றிய, மாநில அரசாங்கமும் முன்வராத நிலையை பார்க்கும்போது மிகவும் கவலையாகவும் அதை விட கோபமாகவும் உள்ளது.

சிறப்பு முகாம்களில் அவர்களை வைத்து உடலாலும், உள்ளத்தாலும் எவ்வளவோ துன்புறுத்தி விட்டீர்கள். இதற்கு பின்னர் கூட உங்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா? அப்படி என்ன அவர்கள் பெரிதாக உங்களை கேட்டார்கள்?

அவர்களும் சாதாரண மனிதர்கள் போல் வாழ்வதற்கு தேவையான ஏற்பாடுகளை ஏன் இதன் பின்னும் உங்களால் செய்துகொடுக்க முடியவில்லை?

ஈழத்தில் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் என்கிறபடியால்தான் அவர்கள் இங்கே வந்தார்கள். ஆனால் அவர்களை நீங்கள் பார்க்கின்ற விதமோ,

நடத்துகின்ற விதமோ அறமற்ற சிங்கள அதிகார வர்க்கத்திற்கு சமமானது என்று கூட சொல்ல முடியாது அதைவிடவும் சற்று மேலானது என்பது எத்தகைய குரூரம்.

ஈழத்தில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்ற விடயம் என்பது நூறு சதவிகித உண்மை என்பதை தற்போதைய ஈழத்தின் செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள

மனிதப் புதைகுழியை அகழும்போது அங்கே எங்களின் தொப்புள்கொடி உறவுகளுக்கு நிகழ்ந்த அநியாயங்களையும், அக்கிரமங்களையும் கண்கூடாக பார்க்கக்கூடியதே ஆகப் பெரும் சாட்சியாக நிற்கின்றது.

இதனை வைத்து பார்க்கும்போது இதற்கு மேலும் உங்களுக்கு பட்டவர்த்தனமாக தெரியவில்லையா அவர்களுக்கு அங்கே உயிர் அச்சுறுத்தல் இருக்கிறதென்கிற விடயம்?

அரசியல் ஆதாயத்திற்காக தொப்புள்கொடி உறவுகள் என்று நாம் வாய் கிழிய கத்தினால் மட்டும் போதாது. அந்த தொப்புள் கொடி உறவுகள் அடைக்கலம் புகுந்த நமதிடத்தில்

அவர்களை காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் அத்தனை பேருக்கும் உள்ளது என்பதை தமிழ்நாடு அரசும், தமிழ் நாட்டு மக்களும் மறந்து விடாதீர்கள்.

ஏற்கனவே ஒரு தியாக தீபம் திலீபனின் உயிரை காப்பாற்ற முடியாத பாவிகளாக இந்திய ஒன்றியம் வெட்கித் தலை குனிந்து நிற்கின்றது. மேலும் அதுபோல் ஒரு பாவச் செயல் இடம்பெறாமல் தடுக்க வேண்டியது எமது கடமை.

எனவே யோகராசா நவநாதனின் கோரிக்கைகளுக்கு இனியாவது செவி சாயுங்கள். அவர்களையும் வாழ விடுங்கள். அன்னம் தண்ணி நீர் ஆகாரமின்றி எட்டாவது நாளை கடந்து உண்ணா நிலையிலிருக்கும்

சகோதரர் யோகராசா நவநீதன் அவர்களின் உயிரை காப்பாற்றும் வகையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை தர வேண்டும். இதன் பிறகும் தமிழ் நாட்டில் இருக்கின்ற ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஏதாவது ஒன்று நடந்தால்

இந்திய அரசோ மாநில அரசோ நீங்கள்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதனை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *